திமுகவில் சேருகிறேனா? தங்கத்தமிழ்ச்செல்வன் பதில்
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதில்லை என்றும், தான் ஒரு உண்மையான அதிமுக தொண்டன் என்பதால் திமுகவில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
நான் அ.தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி. அ.தி.மு.க. 2 ஆக பிரிந்த போது சசிகலா தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன்.
நான் தி.மு.க.வில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நான் இருப்பதாக கூறினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லையே?
எங்களுக்கு அரசியல் நெருக்கடிகள் பாதிப்புகள் வரும் என தெரிந்துதான் இப்போது இருக்கும் தலைமையை பின் தொடர்ந்து வருகிறோம். எனவே எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு உண்டு.