நாடாளுமன்றத்தில் எதிரொலித்த மம்தா தர்ணா போராட்டம்
சிபிஐ அமைப்பின் அதிரடி நடவடிக்கைக்கும், சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன
இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடத்த இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது மேற்கு வங்கத்தில் சிபிஐ நடவடிக்கையை கண்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து விவாதிக்க அனுமதி கோரி திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. மேலும் தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.
இதேபோன்று மக்களவையிலும் அமளி ஏற்பட்டதால் சிலமணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது