கொல்கத்தா சம்பவங்கள் அனைத்தும் நாடகம்: சிவசேனா

கொல்கத்தா சம்பவங்கள் அனைத்தும் நாடகம்: சிவசேனா

கொல்கத்தாவில் சிபிஐ மற்றும் மம்தா பானர்ஜிக்கும் இடையே நடைபெற்று வந்த சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவை அனைத்தும் நாடகங்கள் என சிவசேனா கட்சி, அதன் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியுள்ளது. இதுகுறித்த அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கொல்கத்தாவில் நடந்து வரும் சம்பவங்கள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும். கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் முறையான சம்மன் கூட எடுத்து செல்லவில்லை.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த 4½ ஆண்டுகளாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஏன் தீவிரம் காட்டவில்லை.

மேற்கு வங்கத்தில் நிலவும் நெருக்கடி நிலையை நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்து பார்க்கவேண்டும், பா.ஜ.க.வின் தலைவராக இருந்து பார்க்கக் கூடாது.

வரும் தேர்தலில் வடஇந்தியா முதல் மராட்டியம் வரை உள்ள 100 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக மேற்கு வங்கத்தில் கூடுதலாக 15 இடங்களை கைப்பற்ற அக்கட்சி திட்டமிடுகிறது.

மம்தா பானர்ஜிக்கும், சி.பி.ஐ.க்கும் இடையேயான மோதல் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதாவால் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.

மம்தா பானர்ஜிக்கும், எங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. ஆனாலும், அவர் மத்திய அரசுக்கு நேர்மையுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

இவ்வாறு அதில் சிவசேனா கூறியுள்ளது.

Leave a Reply