ஒட்டுமொத்த உலகிற்கே பாகிஸ்தான் ஆபத்தான நாடு: சிவசேனா
ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்றும், அந்நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அகற்றினால் தான் உலகம் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உலக வரைபடத்தில் பாகிஸ்தான் துடைத்தெறியப்படும் வரை உலகம் முழுவதும் அமைதி என்பது இருக்காது. பாகிஸ்தான் போன்ற நாடு இந்தியாவுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தானது. அங்கு தொடரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை, நமது நாட்டு ராணுவ வீரர்களின் நடவடிக்கையும் தொடர வேண்டும்.
பாகிஸ்தானின் மண்ணில் அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது. அதே பாணியில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் ஆசார் அழித்தொழிக்கப்பட வேண்டும்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றினார். பிரதமர் மோடி ஆட்சியில் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.