திமுகவுடன் பேசியது உண்மைதான்: உண்மையை ஒப்புக்கொண்ட சுதீஷ்
கூட்டணி தொடர்பாக திமுகவுடன் பேசியது உண்மைதான் என்றாலும், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் எனத் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்ஹ்டு கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்தது. ஆனால் இதனை ஏற்காத தேமுதிக, இன்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தியது
ஆனால் தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்குச் சென்று ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்றிரவு மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்டார். இன்றைய தினம் அவர் சென்னை வருவதகாவும், என்னை வந்து நீங்கள் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இன்று காலை அவரை சந்திக்க இருந்தேன்.
ஆனால் கட்சி அலுவலகப் பணிகளால் அவரை சந்திக்க முடியவில்லை. அதன்பின்னர் அவரை சந்திக்க வந்தேன். சந்திப்பில், கூட்டணி பங்கீடு குறித்தும், எந்தத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பேசினோம். பிரதமர் வருகையால் எங்களுக்கு நேரம் குறைவாக இருந்தது என்பதால், அவர் பிறகு பேசலாம் என்றார். நாங்கள் பிறகு பேசுகிறோம் என்றோம்.
முன்னதாக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருந்த நிலையில் அனைத்து கட்சிகளையும் ஒரே நேரத்தில் அழைத்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தோம். ஆனால், பாமகவை முதலில் அழைத்து ஒப்பந்தம் செய்திருந்தனர். அதனால் எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டது. அந்த நேரம் திமுகவிலிருந்து எங்களை அழைத்தார்கள். நான் அப்போது துரைமுருகனிடம் பேசியது உண்மைதான். தொகுதிப்பங்கீட்டை பொறுத்தவரை எங்கள் பலம் எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை கேட்டுக்கொண்டிருக்கிறோம். கூட்டணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்றோ அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.