ஐரா திரைவிமர்சனம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்தால் போதும் படம் ஓடிவிடும் என்ற நினைப்பில் திரைக்கதையில் கவனம் செலுத்தாத படங்களில் ஒன்றாக இந்த ‘ஐரா’வும் அமைந்திருப்பது ரசிகர்களுக்கான துரதிர்ஷ்டமே
பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த பவானி (நயன்தாரா) பிறக்கும்போதே அப்பாவை முழுங்கிவிடுகிறாராம். கருப்பாக, ராசியில்லாத பவானியை ஊரே வெறுக்க, உடன்படிக்கும் அமுதன் மட்டும் காதலிக்கின்றார். இந்த காதல் கைகூடி வரும் நேரத்தில் யமுனா (நயன்தாரா) செய்த ஒரு சின்ன தவறால் பவானியின் வாழ்க்கையே திசைமாறி கடைசியில் மரணமும் அடைந்து விடுகிறார். தனது மரணத்திற்கு காரணமானவர்களை பவானி பழி வாங்குவது தான் மீதிக்கதை
வழக்கமான யமுனா, கருப்பான பவானி என இரண்டு கேரக்டர்களில் நயன்தாரா நடித்துள்ளார். அப்பாவி முகத்துடன் வரும் பவானி நடிப்பு ஓகே. யமுனா நயன்தாராவை பல படங்களில் பார்த்ததால் சலிப்பு ஏற்படுகிறது. மேலும் குளோசப் ஷாட்களில் நயன்தாரா வயதின் முதிர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது
கலையரசன் படத்தில் பாதி நேரம் டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கின்றார், மீதி பாதி நேரம் இரண்டு நயன்தாராக்களுக்கும் மாறி மாறி அட்வைஸ் செய்கிறார். ஒரு நல்ல நடிகரை வேஸ்ட் செய்துள்ளனர்.
யோகிபாபுவின் ஒன்லைன் காமெடி எடுபடவில்லை. நயன்தாரா அவரை போடா வாடா என்று பேசுவதை எப்படி அனுமதித்தார் என்றும் தெரியவில்லை. பார்வதி பாட்டியாக நடித்திருக்கும் லீலா நடிப்பு ஓகே ரகம்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை சிறப்பாக இருந்தாலும் ஒரு பேய்ப்படத்திற்குரிய மிரட்டும் காட்சிகள் குறைவு என்பதால் இவரது முழுத்திறமை வெளியாகவில்லை. மேகதூதம் பாடல் மட்டும் சூப்பர்
பேய்க்கதை என்றாலே பழிவாங்கும் கதைதான் என்பதுதான் 100 வருட சினிமாவின் ஃபார்முலா. ஆனால் இந்த படத்தில் அற்பத்தனமான காரணங்களுக்காக ஒரு பேய் பழிவாங்குவது போன்ற காட்சிகள் வைத்து இயக்குனர் சர்ஜூன் மிகப்பெரிய லாஜிக் கோட்டை விட்டிருக்கின்றார். பவானியின் வாழ்க்கை திசைமாற அவரால் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் அப்பாவிகள் என்பதால் இந்த படத்தின் அடிப்படையையே ஏற்று கொள்ள முடியவில்லை.
எந்த அப்பாவும் தன் பொண்ணுகிட்ட தன் கோபத்தைக்காட்ட மாட்டாரு, கான்ட்ரவர்சியா எதாவது பேசுனாதான் புகழ்பெற முடியும், அட்டென்சன் சீக்கிங் தேவை, வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? போதும் போதும்கற அளவுக்கு ஒருத்தனுக்கு எல்லாமே கிடைக்குது, இன்னொருத்தனுக்கு எதுவுமே கிடைக்கறதில்லை, கடவுள் தூங்கிட்டாரா? போன்ற வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது. மேலும் பேயை ஒரு பட்டாம்பூச்சி வடிவில் காண்பித்த இயக்குனர் சர்ஜூனின் கற்பனைக்கு வாழ்த்துக்கள்
நயன்தாரா கால்ஷீட் கிடைத்துவிட்டால் போதும் படத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடம்
ரேட்டிங்: 1.5/5