கொலைகாரன்’ திரைவிமர்சனம்

கொலைகாரன்’ திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனி நடித்த இன்னொரு சஸ்பென்ஸ் திரைப்படமான ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

நகரில் ஒரு பிணம் சிதைந்த நிலையில் போலீஸுக்கு கிடைக்கின்றது. அந்த பிணத்தை அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம் அடையாளம் கண்டுபிடித்து, அந்த நபருக்கு நெருக்கமானவர் நாயகி ஆஷ்மா என்பதையும் கண்டுபிடிக்கின்றார். அவரிடம் விசாரணை செய்யும்போது அவர் மீதும், அவரது தாயார் மீதும் எந்தவித சந்தேகமும் வரவில்லை. ஆனால் அவர்களது எதிர்வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி மீது சந்தேகம் வருகிறது. விசாரணை மேலும் தீவிரமடையும்போது திடீரென விஜய் ஆண்டனி ‘நான் தான் கொலைகாரன்’ என சரண் அடைகிறார். அவர் ஏன் சரண் அடைந்தார்? உண்மையில் கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவருக்கும் ஆஷ்மாவுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு பதில்தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்

விஜய் ஆண்டனி நடித்த முதல் படமான ‘நான்’ படத்தில் இருந்து அடுத்தடுத்த படங்களில் வெளிப்படுத்தி வரும் அதே நடிப்புதான் இந்த படத்திலும் அவரது நடிப்பு உள்ளது ஒருவேளை ஒரே மாதிரியான கேரக்டரை தேர்வு செய்வதால் நமக்குத்தான் அப்படி தோன்றுகிறதா? என்று தெரியவில்லை

நாயகி ஆஷ்மா சரியான தேர்வு. ஒரு புதுமுகம் போன்றே இல்லை. முகத்தில் பயம், கோபம், காதல் ஆகிய உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழுக்கு கிடைத்த இன்னொரு நடிக்க தெரிந்த நாயகி

இந்த படத்தின் உண்மையான நாயகன் அர்ஜூன் தான். அவரது விசாரணையின் ஸ்டைல். விஜய் ஆண்டனி மீது எப்போது வைத்திருக்கும் ஒரு கண். விஜய் ஆண்டனி உண்மையில் யார் என்று தெரிந்தும் அவரிடம் தனது பாணியில் மிரட்டலாக விசாரிக்கும் முறை. வித்தியாசமான அணுகுமுறை என ஒரு நிஜ போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார்.

நாசர் போன்ற நல்ல நடிகரை இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். நடிகை சீதாவின் நடிப்பும் ஓகே.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் இசையமைப்பாளர் சைமன் கிங் பின்னணி இசை என்றால் மிகப்பெரிய மைனஸ் இந்த படத்தின் பாடல்கள். இரண்டு பாடல்களையும் தூக்கிவிட்டால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் அதிகரிக்கும்

கேமிரா, எடிட்டிங் உள்பட டெக்னிக்கல் அனைவரின் கடினமான உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. வாழ்த்துக்கள்

த்ரிஷ்யம் படம் போல் நியாயமான காரணத்திற்கு ஒரு கொலை செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஒரு புத்திசாலி யோசிக்கும் வகையிலான கதையை மிக அருமையாக விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். பாராட்டுக்கள். இந்த உலகில் வாழ தகுதியே இல்லாத ஒரு நபரை கொலை செய்ததற்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமா? என்ற கான்செப்டை மிக அருமையாக கொண்டு சென்றுள்ளார். இடைவேளைக்கு பின் திடீர் திடீரென தோன்றும் டுவிஸ்டுகள் ஆச்சரியம் என்றால் கிளைமாக்ஸில் கொலைக்காரன் காரணத்தை கூறும் காட்சி ஆச்சரியத்தின் உச்சகட்டம். ஒருசில நெகட்டிவ்கள் இந்த படத்தில் இருந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. சுப்பர் த்ரில் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம் தான் இந்த கொலைகாரன்

4/5

Leave a Reply