லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்:
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் லாரி ஓட்டுநர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இந்தியா முழுவதுமே லாரி டிரைவர்கள் லுங்கி கட்டிக்கொண்டு ஓட்டுவது எதார்த்தமான ஒன்றாக இருக்கும் நிலையில் இவ்வாறு அபராதம் வசூல் செய்வது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டுவது சட்டப்படி தவறு என போக்குவரத்து துறை போலீஸார் அபராதம் வசூலித்துள்ளனர்
இதுகுறித்து லக்னோவின் போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங் கூறும்போது, ஆடை ஒழுங்கு என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருக்கும் சட்டம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கனரக வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் இது கட்டாயம் என்றும், ஆனால் இதுவரை கடுமையாக பின்பற்றப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே இது குறிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.