வெள்ளத்தில் மூழ்கிய அண்ணா சாலை: சென்னையில் தொடர் மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் நேற்றும் இன்றும் சென்னையில் தொடர்மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதும் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது
நேற்று இரவு 10 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவுக்கு பிறகும் விடிய விடிய நீடித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
நேற்று மட்டும் நுங்கம்பாக்கம் பகுதியில் 6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாகவும், எழும்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, வியாசர்பாடி, ஓட்டேரி, புரசைவாக்கம் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களிலும் கணிசமான அளவில் மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த மழை காரணமாக சென்னை அண்ணாசாலை போன்ற பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் நள்ளிரவுக்கு மேல் மற்றும் இன்று காலையில் பயணம் செய்த பைக், லாரி போன்ற வாகனங்கள் அனைத்தும் குளம் போல தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தபடியே சென்றன.