பெற்றோர் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி: அதிர்ச்சி தகவல்
பெற்றோர்களின் அலட்சியத்தால் சமீபத்தில் தமிழகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலியாகி வருவது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த உள்ளிக் கோட்டை கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி – சுகந்தி தம்பதியின் 2 வயது மகன் ஹரிதேஷ்தான் நேற்று எதிர்வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த மீன்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தொட்டிக்குல் விழுந்த ஹரிதேஷ் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தின்போது ஹரிதேஷ் தாய் தனது வீட்டில் நன்றாக தூங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. தூங்கி எழுந்ததும் தனது மகன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியானதை அறிந்து கதறி அழுத அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
குழந்தையை கவனிக்காமல் அயர்ந்து தூங்கிய தாயின் அலட்சியத்தாலும், தண்ணீர்த் தொட்டியை மூடிவைக்காமல் மெத்தனமாக திறந்து வைத்ததாலும் 2 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.