பட்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர் பப்லு. 2009ம் ஆண்டு மே 25ம் தேதி ரவியுடன், அவரது 2 வயது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பப்லு அங்கு வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார். தெரிந்தவர் என்பதால், ரவி தனது குழந்தையை அவரிடம் கொடுத்தனுப்பினார். நீண்ட நேரமாகியும் குழந்தையை பப்லு கொண்டு வரவில்லை. அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது பப்லுவும் குழந்தையும் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த ரவி, பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே மறுநாள் காலை, அதே பகுதியில் உள்ள பார்க்கில் சிறுமி ஒருவள் படுகாயங்களுடன் மயக்க நிலையில் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமியை யாரோ பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்தனர். விசாரணையில், மாயமான ரவியின் மகள் என்பதும், பப்லு தான் சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பப்லுவை கைது செய்தனர். வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, எம்.பி குப்தா நேற்று முன்தினம் விசாரித்து அளித்த தீர்ப்பு:குற்றம் சாட்டப்பட்டுள்ள பப்லு, சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 20,000 அபராத மும் விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.