பிப்ரவரி 8அம் தேதி தமிழக அரசின் விடுமுறையா? அரசை வலியுறுத்திய அரசியல்வாதி!

பிப்ரவரி 8அம் தேதி தமிழக அரசின் விடுமுறையா? அரசை வலியுறுத்திய அரசியல்வாதி!

உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூச நாளன்று தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முத்தமிழ் முருகன் பிறந்த தினமாக ‘தைப்பூச நாள்’ தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வானவியல் நிபுணத்துவப்படி ,ஆண்டின் இறுதியில் தென்திசையில் சுழல்கிற கதிரவன், வானில் பூச நட்சத்திரம் மக்களின் பார்வைக்கு படி வருகின்ற நொடியில் கதிரவன் தென்திசை மாற்றி வடதிசையில் சுழலத் தொடங்குவதாகவும், அந்த நாளையே தமிழர்கள் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளாக தமிழர்கள் கொண்டாடுவதாகவும் அறியப்படுகிறது.‌

இத்தகையப் பெருமைக்கும் ,சிறப்பிற்கும் உரிய தைப்பூசப்பெருவிழா திட்டமிட்டு ஆரிய-திராவிட அரசுகளால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆரிய ஆகமவிதிக்கு உட்படாத அழகு தமிழின் மறுவடிவமாக முருகன் மீது நம்பிக்கையைக் கொண்டவர்கள் தமிழர்கள். இந்த நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெரும் தைப்பூசப்பெருவிழாவை முன்னிட்டு அந்த நாடு அரசுப்பொது விடுமுறையை அறிவித்து உள்ளது.

இந்த மண்ணிற்கு தொடர்பே இல்லாத பல்வேறு பண்டிகைகளுக்கு தமிழக அரசு விடுமுறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தமிழ் மண்ணில் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளிற்கு இன்றுவரை அரச விடுமுறை வழங்காதது மிகுந்த உள்நோக்கம் உடையது. தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் என எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறையை கொடுத்த தமிழக அரசு இதுவரை முருகனின் தொடர்பான எந்த ஒரு விழாவிற்கும் விடுமுறை வழங்காதது ஏன் ? எனும் கேள்வி‌ எழுகிறது.

உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களின் இக்கோரிக்கையை ஏற்று வருகின்ற தைப்பூச நாளன்று (பிப்ரவரி 08, தை 20) தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply