ஜீவாவின் ‘ஜிப்ஸி’ திரைவிமர்சனம்

ஜீவாவின் ‘ஜிப்ஸி’ திரைவிமர்சனம்

தாங்க முடியலை சாமி… அதிபுத்திசாலி படம் எடுத்தாலே இப்படித்தான்

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாக்கிய ஜிப்ஸி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்

பிறந்த உடனே தாய் தந்தையை தீவிரவாதிகளிடம் பறிகொடுத்த ஜீவா அதன்பின் ஒரு நாடோடியிடம் வளர்கிறார். இதனால் அவரும் இந்தியா முழுவதும் சுற்றும் நாடோடியாகவும், பாடகராகவும் வளர்ந்து வருகிறார்

இந்த நிலையில் நாகூருக்கு குதிரையுடன் வரும் ஜீவாவை, இஸ்லாமிய பெண் நடாஷா சிங் பார்த்தவுடன் காதலிக்கிறார். விடிந்தால் நடாஷாவுக்கு திருமணம் என்ற நிலையில் திடீரென ஜீவாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஓடிப்போகவும் செய்கிறார்.

ஜீவா, நடாஷா இருவரும் வட இந்தியாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர் இந்த நிலையில் ஜீவாவின் மனைவி நடாஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென மதக்கலவரம் வருகிறது. இந்த கலவரத்தில் இருவரும் பிரிகின்றனர். அதன்பின் ஜீவாவிற்கு என்ன நடந்தது? நடாஷாவும் அவருடைய குழந்தையும் என்ன ஆனார்கள்? இருவரும் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை

ஜிப்ஸி என்ற தனது கதாபாத்திரத்தை ஜீவா உணர்ந்து நடித்துள்ளார் இந்த படத்தை பொறுத்தவரை அவருடைய நடிப்பு மற்ற படங்களை விட மிஞ்சிய வகையில் உள்ளது ஜிப்ஸி என்ற நாடோடியாக அவ்வப்போது அவர் பேசும் சீர்திருத்த வசனங்கள் கைதட்டும் வகையில் உள்ளது

அறிமுக நடிகை நடாஷா சிங், முதல் படத்திலேயே ஸ்கோர் வாங்கிவிடுகிறார். அதிகம் வசனம் இல்லாவிட்டாலும் அவருடைய பார்வை ஒன்றே போதும் நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறது

இந்த படத்தில் வரும் மற்ற கேரக்டர்கள் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இசையமைப்பாளர் சந்தோஷ் சிவனின் பாடலில் ஒரு பாடல் கூட கேட்கும் வகையில் இல்லை என்பது வருத்தமான ஒன்று. குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைக் கொடுத்தது

இயக்குனர் ராஜுமுருகன் அவர்கள் இந்த படத்தை ஒரு பக்க சாயலில் எடுத்துள்ளது ஆரம்பத்திலிருந்தே தெரியவருகிறது. இரு மதங்களுக்கு இடையே கலவரம் என்று கலவர காட்சியை காண்பிக்கும் போது அதில் ஒரு தரப்பினர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது போன்றும், இன்னொரு தரப்பினர் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக இருப்பதாகவும் காண்பித்துள்ளார்

பம்பாய் படத்தில் இயக்குனர் மணிரத்னம் தைரியமாக இருபக்கமும் உள்ள நியாய, அநியாயங்களை தைரியமாக சொல்லியிருப்பார். அந்த தைரியம் ராஜூமுருகனுக்கு இல்லை என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஒரு காட்சியில் கூட அவர் ஒரு பிரிவினர்களை நெகட்டிவ்வாக காண்பிக்கவில்லை.

மேலும் ஜீவா-நடாஷாசிங் காதல் மிகவும் செயற்கைத் தனமாக உள்ளது. வசதியான வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு பெண் திடீரென ஒரு நாடோடியை பார்த்த உடன் காதல் கொள்வது என்பது நம்பும் வகையில் இல்லை. பல காட்சிகள் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வருகிறது. கிளைமாக்ஸில் பாதிக்கப்பட்ட பெண்ணையும், பாதிப்பை ஏற்படுத்திய தீவிரவாதியையும் சந்திக்க வைக்கும் காட்சி உண்மையிலேயே சூப்பர். ஆனால் அந்த காட்சியை இதைவிட மோசமாக வேறு எந்த ஒரு இயக்குனரும் இயக்கியிருக்க மாட்டார். எவ்வளவு அருமையான ஒரு காட்சியை இயக்குனர் கோட்டைவிட்டுவிட்டார். மொத்தத்தில் அதிபுத்திசாலி படம் எடுத்தால் இப்படித்தான் சாமானியர்கள் பார்க்க முடியாத வகையில் இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

2/5

Leave a Reply