ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை 6 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மற்றொரு தீவிரவாதி பிலால் மாலிக்கை 12 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு நேற்று வேலூர் ஜெஎம் 3 கோர்ட்டில் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கட்ராமன் மனுதாக்கல் செய்தார். இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் பிலால் மாலிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
வருகிற 17ம் தேதி வரை 11 நாட்கள் பிலால் மாலிக்கிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் சிவகுமார் உத்தரவிட்டார். விசாரணைக்கிடையே 11ம் தேதியன்று பிலால் மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமாரி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பிலால் மாலிக்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் பக்ருதீனுக்கு 11ம் தேதி வரை போலீஸ் காவல் முடிவடைவதால் அதே நாளில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். போலீஸ் பக்ருதீனைத் தொடர்ந்து பிலால் மாலிக்கிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அவர்களிடம் இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரும் புத்தூரில் தங்கியிருந்தபடி தமிழக& ஆந்திர எல்லையோர வன பகுதிகளில் தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியிருந்தனர். அதன்பேரில் பேரணாம்பட்டு மற்றும் நாயக்கநேரி, கொத்தூர், போயிசின்னாகனபல்லி, லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் ஆம்பூரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து, அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.