சென்னையில் கார் ஓட்டுநராக பணி புரியும் ஒரு வாலிபரை சினிமா பாணியில் நடு ரோட்டில் ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
குன்றத்தூர், மனஞ்சேரியை சேர்ந்தவர் குமார் (வயது 30). போரூரில் உள்ள தனியார் கால்டாக்சியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைசாலி. இருவரும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு வைசாலி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இன்று காலை 9 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக குமார், மோட்டார் சைக்கிளில் போரூர் நோக்கி சென்றார். கொல்லச்சேரியில் உள்ள தியேட்டர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய குமார் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி அவரை சுற்றி வளைத்தனர். குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டிச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். குமார் இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் அந்த கும்பல் அதே காரில் தப்பி சென்று விட்டனர். காலை நேரத்தில் மிகவும் பரபரப்பான சாலையில் சினிமா பாணியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை பார்த்த அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தகவல் அறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர். குன்றத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் டில்லிபாபு என்பவரிடம் குமார் டிரைவராக வேலை பார்த்து உள்ளார். அப்போது அவரது மகள் வைசாலியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுபற்றி தெரிந்ததும் குமாரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இருப்பினும் அவர் வைசாலியுடன் செல்போனில் காதலை வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைசாலியை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும், காதலை மறக்க முடியாத அவர் கணவரை பிரிந்து குமாரை தேடி வந்தார். அதை தொடர்ந்து இருவரும் 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து தனியாக வாழ்ந்தனர். இதற்கு குமாரின் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வைசாலியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குமார் மீது கோபத்தில் இருந்து வந்தனர். இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக டில்லிபாபு மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கொலை முடிந்ததும் காரில் தப்பிய கும்பல் போரூர் நோக்கி சென்றாக தெரிகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.