ஊரடங்கால் அதிகரிக்கும் குழந்தைகள் திருமணம்: கமல்ஹாசன் வருத்தம்

எந்தவொரு பேரிடரின் போதும் அதற்குப் பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்பவர்கள் இளம் சிறார்கள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், மிக எளிதில் கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் போன்ற சுரண்டல்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கியபோதே. கொரோனா பெருந்தொற்றால் அடுத்த பத்தாண்டுகளில் 130 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் என யூனிசெஃப் எச்சரித்தது. கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக CRY தன்னார்வல அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சேலம், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. மிக ரகசியமாக நிகழ்வதால் இந்தக் கசப்பான உண்மை வெளியுலகிற்குத் தெரியாமலே போய்விடுகிறது. புள்ளி விவரங்களின் படி கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் சேலத்தில் 98, தர்மபுரியில் 192 எனத் தமிழகத்தில் சுமார் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகம்.

அறியாமை, மூட நம்பிக்கை, சாதிப் பற்று,வறுமை, ஊரடங்கு காலத்தில் திருமணச் செலவுகள் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன. உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகக் குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சமூக நலத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.”

குழந்தைகள், திருமணம், ஊரடங்கு, கமல்,