வாஷிங்டன்: இந்தியாவில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பல பிரச்சனைகளை தீர்த்த வைத்த அமெரிக்கா, காஷ்மீர் பிரச்சனையிலும் அமெரிக்கா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என அதிபர் ஒபாமாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக கூறும் இந்தியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று அவர் கூறினார். இதனிடையே, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பிரிவில் 50 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 6 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சம்பா மாவட்டத்தில் எல்லை பிரச்சனை குறித்து ஆய்வு செய்த அன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியிருப்பது பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 200க்கும் அதிகமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. விடிய விடிய பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலால் அச்சம் அடைந்துள்ள எல்லையோர கிராம மக்கள் வீடுகளை காலி செய்து வெளி வருகின்றன.