வேலூரில், பாரதீய ஜனதா கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பாக வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இந்த கொலை வழக்குகள் தொடர்பாக…
போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தீவிரவாதிகள் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் அவர்களை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள். பிறகு அவர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன் ஆகியோர் கொல்லப்பட்டபோது அதனை சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்தும் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில், அந்த சாட்சிகளை வைத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை அடையாளம் காட்டுவதற்காக அடையாள அணிவகுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வேலூர் மத்திய சிறையில் நடைபெறுகிறது. குற்றவாளிகளை பார்த்து அடையாளம் கூறப்போகிறவர்கள் யார்- யார்? என்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.