ஆந்திராவில் கனமழை!

சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. தற்போது அங்கு பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அங்கிருந்து நகர்ந்து, தெலுங்கானாவை ஒட்டி உள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திராவில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலோ ஆந்திரா, ராயலசீமா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்திலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தெலுங்கானா போராட்டத்தால் ஸ்தம்பித்து வந்த  ஆந்திரா தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி இருக்கிறது.

Leave a Reply