இன்னும் சில நாட்களில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை, மேலும் அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் டீலர்களுக்கு கமிஷன் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதால், அவற்றின் சுமை, வாடிக்கையாளர் மீது ஏற்றப்படவுள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும், 42,000 டீலர்கள் உள்ளனர். இவர்கள், தங்களுக்கான கமிஷன் தொகை, நீண்ட நாளாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், அதனால், பெட்ரோல், லிட்டருக்கு, 42 பைசாவும், டீசலுக்கு, 27 பைசாவும், கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாகவும், அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், அவர்களுக்கான கமிஷன் தொகையை, இன்னும் சில நாட்களுக்குள் அதிகரிக்க, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அப்படி, கமிஷன் தொகை உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்பாடும் வருவாய் இழப்பு, வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும். இதனால், இன்னும் சில நாட்களுக்குள், கமிஷன் தொகை உயர்த்தப்பட்டு, அதன்பின், எரிபொருள் விலையும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.