பெண்களின் மாதவிடாய் வலியைப் போக்கும் பிட்டிலாசனம்

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat / cow pose) என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டும் சேர்ந்துதான் சிறப்பான பலன்களைத் தரும். முதுகுத்தண்டு உள்புறமாகவும் மேல்புறமாகவும் அழுத்தி உயர்த்தப்படுவதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகமாகிறது. முதுகுப் பகுதி முழுவதும் புத்துணர்வு பெறுகிறது.

முக்கிய குறிப்பு: பஸ்சிமோத்தானாசனம் செய்த பின் முதலில் மாடு நிலை (Cow Pose) செய்து பின் பூனை நிலை (Cat Pose) செய்வது ஒன்றுக்கு ஒன்று மாற்றாக சரியாக இருக்கும். இனி இந்த வரிசையில் செய்வது நல்லது.

பலன்கள்

சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.

வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை முன்னேற்றுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.

உடல்-மனம் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது.

செய்முறை

விரிப்பில் தவழும் நிலைக்கு செல்லவும். உங்கள் மணிக்கட்டு உங்கள் தோளின் நேர் கீழாகவும், கால் முட்டி, இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். தலை கழுத்துக்கு நேராக இருக்க வேண்டும்; அதாவது, நீங்கள் தரையை பார்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு, உங்கள் மார்பை முன் நோக்கியும் ஆசனப் பகுதியை மேல் நோக்கியும் உயர்த்தி, வயிற்றை கீழ் நோக்கி மென்மையாக தள்ளவும். அதாவது, உங்களின் முதுகு கீழ் நோக்கி நன்றாக வளைந்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது தலையை நிமிர்த்தி பார்க்கவும். மூச்சை வெளியேற்றியவாறே முதுகை சம நிலையில் வைக்கவும். இவ்வாறு 10 முதல் 20 முறை செய்யவும்.

குறிப்பு

மணிக்கட்டு மற்றும் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் மற்றும் தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தை நேராக வைத்து பயிலவும்.