சிறந்த போர் விமானி ஆன்டோன் லிஸ்தபாட் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கியது உக்ரைன்!

 

உக்ரைனின் முக்கிய போர் விமானிகளில் ஒருவர் தற்போது ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டுள்ளார். ‘நியூஸ்வீக்’ இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி கேப்டன் ஆன்டோன் லிஸ்தபாட் என்பவர் உக்ரைன் அரசின் `சிறந்த போர் விமானி’ விருதை 2019-ம் ஆண்டு பெற்றுள்ளார்.  இவர் தற்போது கொல்லப்பட்டார் என்பதை மேற்கு உக்ரைனில் உள்ள அவர் படித்த கல்லூரி உறுதிசெய்துள்ளது. அக்கல்லூரி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “இயற்பியல் பட்டதாரியான ஆன்டோன் லிஸ்தபாட் உக்ரைனிய படைக்காக சண்டையிட்டு கொல்லப்பட்டார்” எனக் கூறப்பட்டுள்ளது.

204 வது செவாஸ்டோபோல் விமானப் படையின் விமானியான ஆண்டோனின் உடல், மேற்கு உக்ரைனின் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள சுகாலிவ்கா கிராமத்தில், அவரின் தோழர் கர்னல் யூரி போஹோரிலியுடன் அடக்கம் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிது நாள்களுக்கு முன் தான் ஆன்டோன் தனது வீரம் மிகுந்த பங்களிப்பிற்காக உக்ரைன் அரசின் மதிப்புமிக்க விருதை அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பெற்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் 30-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்டோன் ஒரு படை குழுவிற்கு தலைமை தாங்கினார்.

ஆன்டோனை அவர் கல்லூரி, `மிகவும் விடாமுயற்சி கொண்டவர்’ என்று நினைவு கூர்ந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதல் நிமிடம் முதல் கடைசி நிமிடம்  வரை அவர் உக்ரைனை பாதுகாத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா , உக்ரைன் மீதான படையெடுப்பை `சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கிறது. உக்ரைன், அதன் ஆதரவு நாடுகள், ரஷ்யா ஒரு ஏகாதிபத்திய பாணி போரை நடத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை இவரைப்போல் ஆயிரக்கணக்கானோர் இப்போரில் கொல்லப்பட்டுள்ளனர். இப்போர் மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்குமான உறவுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.