கோவிட் -19 தொற்று காலத்தில் ரூ.1,000 கோடியை டோலோ 650 மாத்திரையை மருத்துவர்களுக்கு இலவச மாதிரிகளாக வழங்குவதில் பரிந்துரைக்க செலவழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 தொற்று காலத்தில் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் `டோலோ 650’  என்ற மாத்திரையை உற்பத்தி செய்யும் நிறுவனமானது , அந்த மாத்திரையை பிரபலமடைய செய்ய, அல்லது பரிந்துரைக்க கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை மருத்துவர்களுக்கு இலவச மாதிரிகளாக வழங்குவதில் மட்டும் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் மாதிரி மருந்துபொருள்களை வழங்குவதை முறைப்படுத்த வேண்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதி சங்கத்தின் கூட்டமைப்பு (The federation of Medical and sales representative association of India) என்ற அமைப்பு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரீக் வாதாடினார். மருந்து மாதிரிகள் மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதை குறித்து பேசிய அவர் உதாரணமாக டோலோ மாத்திரை குறித்து குறிப்பிட்டு பேசினார், `ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டோலோ 650 மாத்திரையை மருத்துவர்களுக்கு இலவச மாதிரிகளாக வழங்குவதில் செலவிடப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களும் அந்த மருந்தை பரிந்துரை செய்கிறார்கள்” எனக் கூறினார். இந்த தகவல்களை Central board of direct taxes (CBDT) ல் இருந்து பெற்றதாகக் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசுத், “நீங்கள் கூறும் விஷயங்கள் காதுக்கு இனிமை தரக்கூடிய விஷயமாக இல்லை. எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட போது நானும் அதே மாத்திரையை தான் உட்கொண்டேன். இது அதிமுக்கியத்துவமிக்க பிரச்னை” என்றார். இந்த பொதுநல மனுவில் மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் வரைமுறையில்லாமல் இலவச மாதிரிகளை வழங்குவதை முறைப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது. மேலும் மருந்து விநியோகம் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் மூலம் முறையான வழிமுறைகளை(Uniform code of pharmaceutical Marketing practices-UCPMP) வகுக்க வழிசெய்யுமாறு‌ கேட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த பின் நீதிபதிகள் மத்திய அரசிடம் பதிலை கோரி உள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பரீக், “இந்த விவகாரத்தில் டோலோ 650 குறித்த செய்திகள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டது. தேவையற்ற அளவிலான டோசேஜ்கள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் இலவச மாதிரிகளுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மாத்திரையின் 500 mg டோசேஜ் அளவுக்கு அரசால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே மாத்திரையை 650 mg என உற்பத்தி செய்யும்போது அதன் விலை கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்கிறது. இந்த காரணத்திற்காகவே பல மாத்திரைகள் குறிப்பிட்ட டோசேஜ் அளவு தேவையே இல்லை என இருந்தாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை முறையாகக் கட்டுப்படுத்த நெறிமுறைகள் தேவை” எனக் கூறினார்.