பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் வழக்கினை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்த அவர், அடுத்த விசாரணையின்போது சிபிசிஐடி அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதற்கிடையே காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் உடனடியாக கிடைத்துள்ளன. நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்த செய்தி.
கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டார். இதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட சிறப்பு டிஜிபி புதுக்கோட்டை பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் எஸ்.பி., ஒருவரை காரில் உடன் வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் காரில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பெண் எஸ்.பி.க்கு புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அப்பெண் எஸ்.பி., இதுதொடர்பாக அப்போதைய டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு சென்றார். இதனையறிந்த சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் என்பவரிடம் பெண் எஸ்.பி புகார் அளிக்காமல் இருக்க உதவும்படி கேட்டதாக தெரிகிறது.
உடனே எஸ்.பி., கண்ணன் செங்கல்பட்டு மாவட்ட எல்கையில் அவரை தடுத்து நிறுத்தி இதுதொடர்பாக புகார் எதுவும் அளிக்க வேண்டாம் எனவும், சிறப்பு டிஜிபியிடம் போனில் பேசுமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பெண் எஸ்.பி., இதுதொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி., கண்ணன் மீது புகார் அளித்தார். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் இருவரும் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபிசி பிரிவு 354 (பெண்ணிடம் அத்து மீறுதல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதலை சடை செய்யும் பிரிவு 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாக கமிட்டியும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி மீதான வழக்கு ஆவணங்களை காணவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியிடம் கூறியுள்ளனர். சுமார் பத்து நிமிடங்கள் வரை பல்வேறு இடங்களில் தேடியும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் முதலில் கிடைக்கவில்லை. இதனையடுத்து வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி புஷ்பராணி தெரிவித்தார். அன்றைய தினம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனிடையே, நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை அங்கு சல்லடைப்போட்டு தேடியுள்ளனர். இதனையடுத்து ஆவணங்கள் கிடைத்தன. இத்தகவலை அவர்கள் நீதிமன்றத்திலும் தெரிவித்தனர்.