கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.
கடந்த நான்கு நாட்களாக அனைத்து மணல் மற்றும் எம். சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கனிமங்களை வெட்டி எடுப்பதில் இணைய வழி பாஸ் வேண்டும், அதிக லோடு ஏற்ற மாட்டோம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசினோம். போக்குவரத்துத் துறை அமைச்சரை நாளை மறுநாள் சந்திக்கவுள்ளோம். ஆகவே, நாங்கள் எங்கள் கால வரையரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் வாங்கி கொள்கிறோம். இனி வழக்கம் போல மணல் மற்றும் எம் சாண்ட் லாரிகள் இயங்கும்” என தெரிவித்தார்.
ஒருவேளை எங்களுக்கு திங்கட்கிழமை சந்தித்தும் கூட தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம் எனவும் கூறினார். மேலும் நல்ல முடிவு எட்டப்படவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடுவோம் எனவும் தெரிவித்தார்.