46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- தீபாவளி பரிசு பணம் ரூ.2 கோடி சிக்கியது

சென்னை:

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தீபாவளி பரிசு பணம் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கும் புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று மாலையில் இருந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.

கரூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம், வேலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் இருந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் இருந்தது. அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனை சாவடி, தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் உள்ள சோதனை சாவடி ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது

திருநெல்வேலியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 55). இவர் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குநராக பொறுப்பேற்றார்.

இவர் நேற்று மாலை பணியை முடித்து விட்டு ஒரு பையுடன் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உமாசங்கர் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர்..

அதில் கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை விருதுநகர் திருமலை நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.

அங்கு கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். உமாசங்கரிடம் மொத்தம் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் இந்த சோதனை மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.