ஆலந்தூர்:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன் பயணம் செய்தார்.
விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி விமானத்துக்குள் கேட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் பயணி ஹேம்நாத்தின் பேத்தி தான் அமர்ந்திருந்த, விமான இருக்கைக்கு கீழே உள்ள அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த, லைப் ஜாக்கெட்டை பட்டனை அழுத்தி எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.
இதை அடுத்து விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் விசாரித்து அவசர கால ஒலியை நிறுத்தினர். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே அவசர கால ஒலி எழுந்தது தொடர்பாக சென்னையில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் ஹேம் நாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே லைப் ஜாக்கெட் இருக்கும்.
ஆபத்து நேரத்தில் மட்டுமே அதில் உள்ள பட்டன் அழுத்தி எடுக்க வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன் கேட்கும் என்றனர்.