சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, இதில் பலப்பரீட்சை நடத்தினர்.
மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், முதல் ஒன்பது சுற்று முடிவில் 3 வெற்றி, 6 “டிரா’ செய்த கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்றிருந்தனர். இரு வீரர்கள் மோதிய பத்தாவது சுற்று நேற்று நடந்தது.
கார்ல்சன் இம்முறை வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இவரைப் பொறுத்தவரையில் போட்டியை “டிரா’ செய்தால், உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுவிடலாம். அதேநேரம், ஆனந்த் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில், கருப்பு காய்களுடன் களமிறங்கினார்.
கார்ல்சன், தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை 2 கட்டம், அதாவது ருய் லோபஸ் முறையில் நகர்த்தி போட்டியை துவக்கினார். பதிலுக்கு ஆனந்த், சிசிலியன் முறையில் நகர்த்தினார்.
முதல் சில நிமிடத்தில் இருவரும் வேகமாக காய்களை நகர்த்தினர். 11வது நகர்த்தல் முடிந்த போது, தலா ஒரு குதிரை, மந்திரி காலியாகி இருந்தன. பின் போகப் போக போட்டி மந்தமானது.
வெற்றி பெற வேண்டிய ஆனந்த், இதற்கு தேவையான சரியான நகர்த்தல்களை செய்யவில்லை. போட்டியில் 16 நகர்த்தல் முடிந்த போது, கார்ல்சன் கை சற்று ஓங்கியது. ஆனந்த், 28வது நகர்த்தலில் தனது ராணியை, கார்ல்சனின் ராஜா பக்கம் நகர்த்தி தவறு செய்தார்.
அதேநேரம், 30வது நகர்த்தலில் ஆனந்த் சிப்பாயை காலி செய்த கார்ல்சன், தன்பங்கிற்கு தவறு செய்ய, போட்டி சமநிலை அடைந்தது. அடுத்தடுத்த சில நகர்த்தல்களில் இருவரது ராணியும், இரண்டு யானைகளும் வெளியேற்றப்பட்டன.
கார்ல்சன், ஆனந்துக்கு தலா ஒரு குதிரை, 6 சிப்பாய்கள் மீதமிருந்தன. எப்படியும் வென்றாக வேண்டிய கட்டாயம் என்பதால், ஆனந்த் போராடினார். போட்டியின் 57 வது நகர்த்தல்களில், இருவரும் தங்கள் சிப்பாயை ராணியாக மாற்றினர்.
இருப்பினும், கார்ல்சனிடம் மூன்று சிப்பாய்கள் கூடுதலாக இருந்தன. ஆனந்திடம் ஒரு ராணி மற்றும் ஒரு குதிரை மட்டுமே இருந்தது. கடைசியில் வேறுவழியில்லாத நிலையில், 4 மணி, 46 நிமிட போராட்டத்துக்குப் பின், 65 வது நகர்த்தலில் போட்டி “டிரா’ ஆனது.
பத்தாவது சுற்று முடிவில், 3 வெற்றி, 7 “டிரா’ செய்து, பட்டத்துக்கு தேவையான 6.5 புள்ளிகள் பெற்று விட்டதால், கார்ல்சன் புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார். மீதமுள்ள 2 சுற்றுக்கு அவசியமில்லாமல் போனது. முதன் முறையாக சொந்தமண்ணில் களமிறங்கிய ஆனந்த், 3.5 புள்ளிகள் மட்டும் பெற்று, மகுடத்தை இழந்தார்.
உலக செஸ் போட்டியில் “டை-பிரேக்கருக்கு’ செல்லாமல் போட்டி முடிந்ததால், மொத்த பரிசுத் தொகையில், 60 சதவீதம் அதாவது, ரூ. 8.40 கோடி பரிசை கார்ல்சன் தட்டிச் செல்கிறார்.
இந்திய “கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில்,
“”உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமாக உள்ளது. இப்போட்டியில் எனது யுத்திகளை முறைப்படி பயன்படுத்த தவறிவிட்டேன். ஐந்தாவது சுற்றில் தோல்வி அடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியது,” என்றார்.
உலகின் “நம்பர்-1′ வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் கூறுகையில்,
“”முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனந்த் போன்ற மிகச் சிறந்த வீரருக்கு எதிராக வெற்றி பெற்று, உலக சாம்பியன் பட்டம் வென்றது உற்சாகமாக உள்ளது. மீண்டும் இவருடன் விளையாட விரும்புகிறேன். மூன்றாவது மற்றும் 4வது சுற்றுகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற சாதகமாக அமைந்தன,” என்றார்.
நார்வே “கிராண்ட் மாஸ்டர்’ கார்ல்சன், தனது 22வது வயதில் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் குறைந்த வயதில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரஷ்ய “கிராண்ட் மாஸ்டர்’ கேரி காஸ்பரோவ் சாதனையை சமன் செய்தார். கடந்த 1983ல் முதன்முறையாக பட்டம் வென்ற காஸ்பரோவ், தனது 22வது வயதில் உலக சாம்பியன் ஆனார்.