திமுக மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் மோதல்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. எனவே, தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

தி.மு.க.வினருக்கு போட்டியாக அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் இரவு விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதுபற்றி அறிந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் அங்கு திரண்டனர். இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதனால் இரவில் பிரச்சனை அத்துடன் முடிந்தது.

நேற்று காலையில் திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் நீதிமன்றம் முன்பு திரண்டனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் விளம்பர பலகைகள் வைக்க முயன்றனர். இதையறிந்த தி.மு.க.வினரும் நீதிமன்றம் முன் திரண்டதால் மீண்டும் பிரச்சனை வெடித்தது. அப்போது தி.மு.க.வின் விளம்பரங்களை அ.தி.மு.க.வினர் கிழித்து வீசியதாக தெரிகிறது. நீதிமன்றம் நுழைவு வாயில் முன் இருந்த தி.மு.க. விளம்பர பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் ஒருவருக்கொருவர் கொடிக்கம்பங்களால் தாக்கியும், கற்களை வீசியும், கம்புகளால் அடித்தும் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றம் முன்பு 2 விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இது தி.மு.க.வினருக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது.

தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர் வைத்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். காவல்துறையினர் தி.மு.க.வினரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. விளம்பர தட்டிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் கற்களை வீசி அ.தி.மு.க. விளம்பர பேனர்களை சேதப்படுத்தினர்.

காவல்துறையினர் தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி, அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் சமரசத்தை கேட்காத தி.மு.க. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் நீதிபதி முருகாம்பாள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் அமைதியானார்கள்.

பின்னர் மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இரு கட்சிகளின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்றம் வளாகத்தில் நுழைந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 25 ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக தி.மு.க. வழக்கறிஞர்கள் 9 பேரும், அ.தி.மு.க. தரப்பில் 12 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

Leave a Reply