வங்கக்கடலில் புயல் சின்னம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் நேற்று காலை வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் சாரலுடன் பெய்ய தொடங்கியது. இதன்பின் பலத்த மழையாக மாறியது. மதியம் வரை பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இதனால் பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன. மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், சத்திரக்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டாக காணப்பட்டது. பிற்பகல் முதல் லேசான தூறல் இருந்தது. பலத்த மழை எதுவும் இல்லை. விருதுநகர் மாவட்டத்திலும் மழை எதுவும் இல்லை. பகல் முழுவதும் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதுரை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை. ஆனால் மேகமூட்டமாக இருந்தது. காலை முதல் மாலை வரை இதேநிலை தான் நீடித்தது. இரவு நேரத்தில் குளிர் காணப்பட்டது

Leave a Reply