பெங்களூரு எ.டி.எம் தாக்குதல் – போலீஸ் விசாரணை

கடந்த 19 ஆம் தேதி காலை பெங்களூருவில் உள்ள ஏடிஎம்-மில் பணம் எடுக்க சென்ற வங்கி மேலாளர் ஜோதி உதய், அரிவாளால் கடுமையாக தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம மனிதனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு எ.டி.எம்-மில் தாக்குதல் நடத்தியவரை போன்ற ஒரு நபர் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட கதிரி என்னுமிடத்தில் உள்ள பி.எஸ்.யூ. வங்கியின் ஏ.டி.எம்-மில் இரண்டு முறை பணம் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதாக போலீசாருக்கு வங்கி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பெங்களூரு சம்பவத்தின் போது அணிந்திருந்த அதே சட்டை மற்றும் அதே பையையும் அவர் வைத்திருந்ததாகவும், இதுகுறித்த விடியோ காட்சிகளை சேகரிக்கவுள்ளதாகவும் அனந்தபூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனந்தபூர் தர்மாவரம் நகரில் கடந்த 10 ஆம் தேதி அன்று ஒரு வயதான பெண்மணியை கொன்று அவரிடமிருந்து அவரது மகனின் ஏ.டி.எம்-கார்டையும் பறித்துசென்று பின்னர், கதிரி பி.எஸ்.யூ. ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துள்ளதாக கருதப்படும் இந்த நபர் தான் பெங்களூரு தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தெரிவித்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவத்திற்கும், பெங்களூரு ஏடிஎம் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனினும் நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply