மதுரையில் கடத்தப்பட்ட மாணவன்! போலீசார் 4½ மணி நேரத்தில் மீட்பு!

மதுரையை சேர்ந்த பள்ளி மாணவன் ரோகித்தை நேற்று மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் 4½ மணி நேரத்தில் மாணவனை மீட்டு சம்பந்தப்பட்ட 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ரோகித் (வயது 14). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் மாட்டுத்தாவணி பள்ளியில் உள்ள வேன் மூலம் வீட்டுக்கு திரும்பினார். தபால் தந்தி நகரில் இறங்கிய மாணவன் ரோகித் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு காரில் 4 பேர் அங்கு வந்தனர். அதில் 2 பேர் மாணவருடன் பேச்சு கொடுத்தனர். 2 பேர் காரிலேயே இருந்தனர்.

‘மர்ம’ நபர்கள் மாணவனிடம் எந்த பள்ளியில் படிக்கிறாய்? எப்படி படிக்கிறாய்? பெற்றோர் பெயர் என்ன? என்ற அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரோகித்தும் எந்தவித தயக்கமும் இன்றி சரளமாக பதில் அளித்து வந்துள்ளான்.

அப்போது அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா கார் அருகே வந்தபோது காரின் உள்ளே இருந்த 2 பேர் திடீரென மாணவனை குண்டு கட்டாக தூக்கி காரில் ஏற்றிக்கொண்டு அங்கு இருந்து மின்னல் வேகத்தில் சென்றனர். மாணவன் ரோகித் சத்தம் போடாமல் இருப்பதற்காக காரின் பின்புற சீட்டில் மாணவனை படுக்க வைத்து 2 பேர் அமுக்கி பிடித்துக் கொண்டனர்.

மாலை 5.30 மணி ஆகியும் மகன் வீடு திரும்பாததால் ரவிக்குமார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்துள்ளார். ஆனால் ரோகித் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ரவிக்குமாரிடம், ரோகித் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சுதா என்பவர், உங்கள் மகன் 2 பேருடன் பேசிக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். நான் உறவினர்களாக இருக்கலாம் என கருதினேன் என்றார். இதைத் தொடர்ந்து ரவிக்குமாருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அதில் பேசிய ‘மர்ம’ நபர், உங்கள் மகனை கடத்தி விட்டோம். போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். ரூ.1 கோடி பணத்துடன் வந்தால் உங்கள் மகனை மீட்டு செல்லலாம். அதனை மீறி போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உனது மகனை உயிரோடு பார்க்க முடியாது என கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் நகர் மற்றும் புறநகர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த வினாடியே நாங்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டோம். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளை உஷார்படுத்தி வாகன சோதனை நடத்தப்பட்டது.

மேலும் மாணவனின் படத்தை செல்போன் மூலம் அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி நடவடிக்கையை மேலும் துரிதபடுத்தினோம்.

இந்த நிலையில் ரோகித்தின் தந்தை ரவிக்குமார், எனது மகனை ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயம் உள்ளது. எனவே என்னால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக கூறினார். அதையும் நாங்கள் அனுமதித்து அவருடன் ஒரு போலீசாரையும் மாறு வேடத்தில் ஒரு வாகனத்தில் அனுப்பி வைத்தோம்.

அந்த வாகனத்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தனிப்படை போலீசார் மூலம் பின்தொடரச்செய்தோம். அப்போது ரவிக்குமார் செல்போனில் மீண்டும் ‘மர்ம’ நபர் பேசினார். உடனே ரவிக்குமார் ரூ.30 லட்சம் தயாராக உள்ளது. எங்கே வர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ‘மர்ம’ நபர் முதலில் அறந்தாங்கிக்கும், பிறகு திருச்சிக்கும், புதுக்கோட்டைக்கும் வருமாறு மாறிமாறி இடங்களை தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கடத்தல் கும்பல் திருச்சி பகுதியில் தான் முகாமிட்டுள்ளது என்று உறுதி செய்தோம். அதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம். அவர்களும் தேடுதல் வேட்டையில் அதிரடியாக ஈடுபட்டார்கள்.

‘மர்ம’ நபர்கள் பேசிய செல்போன் எண் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். இதற்கிடையில் கீரனூர் பகுதியில் கடத்தல் கும்பல் பிடிபட்டதாக தகவல் கிடைத்தது. மாணவன் ரோகித்தை பத்திரமாக மீட்ட திருச்சி போலீசார் கடத்தல் கும்பலிடம் இருந்த பயங்கர ஆயுதங்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்ப முயன்ற கார் டிரைவர் கணேசன் என்பவரை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பிரபு என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் திருச்சியை சேர்ந்த ஒருவரையும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

மீட்கப்பட்ட மாணவன் ரோகித் பதட்டத்துடனேயே காணப்படுகிறான். எனவே ரோகித்துக்கு மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் மனரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply