பெங்களூரில் உள்ள ஏ.டிஎம். மையம் ஒன்றில் கடந்த வாரம் பணம் எடுப்பதற்காக சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதி, துப்பாக்கி முனையில் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏ.டி.எம். மையத்துக்குள் ஜோதி நுழைந்ததும் அவரை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர் சர்வசாதாரணமாக ஷட்டரை கீழே இறக்கி விட்டு விட்டு தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதில் மர்ம மனிதனின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக, வங்கி அதிகாரி ஜோதி, பரிதவிக்கும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் ஜோதியிடம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையனை தேடி வருகிறார்கள். ஜோதியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபர் அதனை ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் பகுதியில் ஒருவரிடம் விற்று விட்டு தப்பியுள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருட்டு செல்போனை வாங்கிய நபரை கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கொள்ளையனை பிடிக்க கர்நாடக மாநில காவல்துறையினர் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் அனந்தபூர் பகுதியில் கதிரி என்ற இடத்தில், 2 ஏ.டி.எம். மையங்களில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பெங்களூரில் ஜோதியை தாக்கி நகை பறித்த வாலிபரின் தோற்றம் கொண்ட நபர் ஒருவர் அதில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, ஜோதியை வெட்டி பணத்தை பறித்த வாலிபர் ஆந்திராவில்தான் தங்கியிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் உறுதியாக நம்புகிறார்கள்.
இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் கொள்ளையன், ஆந்திராவில் மூதாட்டி ஒருவரை கொலை செய்து விட்டு அவரது மகனின் ஏ.டி.எம்.கார்டுடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து தப்பியபோது தான் அணிந்திருந்த சட்டையை இன்னும் கழற்றாமலேயே கொள்ளையன் சுற்றித்திரிவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் அவன் ‘சைக்கோ’ குணம் கொண்டவனாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தன்னை யாரும் அடையாளம் கண்டு காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற பயம் கூட இல்லாமல், அவன் சுற்றிதிரிவதால், பொதுமக்கள் அவனிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.