மின் உற்பத்தியைக் குறைக்க காங்கிரஸ் – திமுக கைகோர்த்து கூட்டுச் சதி செய்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை, அவரால் நிரூபிக்க முடியுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மின்வெட்டுப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இது சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சவால் விட்டுக் கேட்கிறேன். மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ (கருணாநிதி) திமுகவினரோ மத்திய அரசில் உள்ளவர்களிடம், மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ பேசியதாக ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? அதற்கு அவர் தயார்தானா என்று கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.