குழாய் எரிவாயுத் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

குழாய் எரிவாயுத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விவரம், ‘கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வரை எரிவாயுத் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், இந்த ஏழு மாவட்டங்களில் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கெயில் நிறுவனத்துக்கு தமிழக தொழிற் துறை உத்தரவிட்டது.
அதை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விதித்த தடை உத்தரவை ரத்து செய்தும், திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்காமல் வேறு பாதையில் அவற்றைப் பதித்துச் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கெயில் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply