பாதுகாவல் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

சமீபத்தில் பெங்களூரில் பெண் ஒருவர் ஏ.டி.எம்மில் தாக்கப்பட்டார். இதனையடுத்து சென்னையில் காவலாளிகளை காவல் பணிக்கு அனுப்பும், பணி செய்து வரும் தனியார் காவல் நிறுவனங்களை (செக்யூரிட்டி நிறுவனம்) ஒழுங்குபடுத்திட போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி நேற்று சென்னையில் காவல் நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்களை அழைத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்கள். காவல் நிறுவனங்கள் சார்பில் 120 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவல் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.

60 வயதுக்கு மேல் திடகாத்திரம் குறைவாக உள்ளவர்களை காவல் பணியாளர் வேலைக்கு சேர்க்க கூடாது. தற்போது பணியில் இருக்கும் காவல் பணியாளர்கள் தொடர்பான, போலீஸ் நன்னடத்தை சான்றிதழ்களை, ஒரு மாதத்திற்குள் கண்டிப்பாக பெறவேண்டும். காவல் பணி வேலைக்கு சேருபவர்களின் நடத்தை பற்றி போலீசாரின் நன்னடத்தை சான்றிதழையும் கண்டிப்பாக பெறவேண்டும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால், அந்த மாநில போலீசார் வழங்கி உள்ள சான்றிதழ்களை வாங்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் வசித்த வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலைய சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply