ஆயுத கப்பல் விவகாரம் 9ம் தேதிக்குள் பதில்

இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க கப்பல் குறித்த வழக்கில் வரும் டிச. 9ம் தேதிக்குள் போலீசார் பதில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் அக்டோபர் 11ம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் சீமேன் கார்டு ஓகியா என்ற தனியார் நிறுவன கப்பல் நுழைந்தது. இந்த கப்பலின் கேப்டன் டுனிக் வாலன்டைன் மற்றும் 22 வெளிநாட்டினர் உட்பட 36 பேரை தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததையடுத்து, 35 பேரும் கடந்த 29ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜன் ஆஜராகி “இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகவுள்ளார், இதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்றார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுவாமிநாதன் ஆஜரானார். விசாரணையை வரும் டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்று போலீசார் பதில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

Leave a Reply