இணையத்தில் ஆர்டர் செய்த பொருட்கள் வீடு தேடி விமானத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்?

இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருட்கள் வீடு தேடி விமானத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? இன்று இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால், நாளை இந்த மாயம் நடைமுறையில் சாத்தியமாகலாம்.

இப்படி எல்லாம் நடக்குமா? எனும் சந்தேகத்தோடு கேட்பவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு பதிலாகும்.

மின் வணிக முன்னோடியான அமேசான், ட்ரோன் (ஈணூணிணஞு) என சொல்லப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, ஆள் இல்லாமல் தானாக இயங்கும் குட்டி விமானங்கள் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானங்கள் பார்சலை கொண்டு வந்து சேர்க்கும். இதன் மூலம் இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருள் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து விடும். 5 கிலோ எடை வரையிலான பொருட்களை இந்த விமானங்களால் சுமந்து வர முடியும்.

எதிர்காலத்தில் அதிவிரைவாக பொருட்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தோடு அமேசான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அறிவியல் புனைகதை போல் தோன்றினாலும், ஆள் இல்லா விமானம் மூலம் பொருட்கள் வீடு தேடி வருவது வருங்கால சாத்தியம் தான்.

ஆள் இல்லா விமானத்தை டெலிவரிக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அமேசான் மட்டும் அல்ல. டொமினோஸ் நிறுவனம் பிட்சாக்களை ஆள் இல்லா விமானம் மூலம் வழங்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல ஆஸ்திரேலியாவில் ஜூகல் எனும் நிறுவனம், பாடப்புத்தகத்தை ஆள் இல்லா விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. பாட புத்தகங்களை வாடகைக்குத் தரும் இந்நிறுவனம் இதற்காக பிலிர்டே எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

Leave a Reply