பெண் வக்கீல் பாலியல் புகார் – நீதிபதி மீது நடவடிக்கையில்லை

இளம் பெண்வக்கீல் ஒருவர் கடந்த நவம்பர் 6-ந் தேதி தனது வலைத்தள பக்கத்தில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தியதாகவும், இந்த சம்பவம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்ததாகவும் எழுதி இருந்தார். சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அந்த பெண் வக்கீல் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து, செக்ஸ் புகாரில் சிக்கியது நீதிபதி ஏ.கே.கங்குலி என்ற தகவல் வெளியானது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.

பெண் வக்கீலின் பாலியல் புகாரை தொடர்ந்து, மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வினித் ரூயா என்பவர் தாக்கல் செய்த புகார் மனுவை தொடர்ந்து, மேற்கு வங்காள மாநில போலீசார் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக பெண் வக்கீல் கூறிய புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.

என்றாலும் மேற்கண்ட சம்பவம் நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 5-ந் தேதி நடந்த முழு கோர்ட்டு கூட்டத்தில் (நீதிபதிகள் கூட்டம்) எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த பிரச்சினையில் இந்த கோர்ட்டால் (சுப்ரீம் கோர்ட்டு) மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க தேவை இல்லை என்று கருதுகிறோம்.

Leave a Reply