அம்மா உணவகத்தை கண்காணிக்க 600 சி.சி., டிவி கேமராக்கள்

அம்மா உணவகத்தை கண்காணிக்க 600 சிசிடிவி கேமிராக்கள் வாங்குவதற்கு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டம் காலை 9.30 மணியளவில் தொடங்கி 11.30 மணியளவில் முடிந்தது. கூட்டத்தின் தொடக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்: தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடிசை பகுதி மற்றும் வாரிய குடியிருப்பு பகுதிகளில் சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைத்தல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி செய்தல், குப்பை அகற்றுதல், உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் செயல்படுத்திடவும் அதற்கு தேவையான நிதி ஆதராத்தை சென்னை மாநகராட்சி வழங்குவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள ரூ.1190.22 லட்சம் செலவாகும் என தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மாநகராட்சியிடம் கோரப்பட்டது. மேலாண்மை துறையின் வருவாய் நிதியின் வைப்பு தொகை மூலம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் தேர்வு மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், செவிலியர், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றிற்கு இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இனி உயர்த்தப்பட்ட உதவி தொகையின் அடிப்படையில் மருத்துவம், என்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் 45 ஆயிரம், சட்டம் படிக்கும் மாணவர்கள் 10 ஆயிரம், செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் 10 ஆயிரம், டிப்ளமோ படிப்பவர்கள் 7 ஆயிரம், கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்பு படிப்பவர்கள் 7 ஆயிரம், எம்.எஸ்.சி, சி.எஸ்சி, ஐடி உள்ளிட்டவை படிப்பவர்களுக்கு 7 ஆயிரம் என வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு 19 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகும்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 அம்மா உணவகங்களை மாநகராட்சியிலிருந்து கண்காணிக்க 600 சிசிடிவி கேமராக்கள் ஒரு கோடியே முப்பத்தி மூன்று லட்சத்து முப்பத்தி ஆறு ஆயிரத்து அறுநூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய் செலவில் கொள்முதல் செய்து பொருத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply