ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

பிரதமருக்கு வழங்குவது போல் ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வக்கீல் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

வக்கீல் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின் போது வெடிகுண்டு வைத்தவர்களையும், இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்தவர்களையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் நாட்டின் பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்ற பாதுகாப்பை ஜெயலலிதாவுக்கு வழங்க கோரி கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பிரதமருக்கு வழங்குவது போல சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசின் கருத்துகளை கேட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave a Reply