பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி

தே.மு.தி.க. அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், நேற்று திடீரென சபாநாயகர் பி.தனபாலை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார். மேலும், அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

அண்மை காலமாக எனது உடல்நிலை சரியில்லை. கடந்த வாரம் டாக்டரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டபோது, டாக்டர் என்னை ஓய்வு எடுத்துக்கொள்ள கூறினார். கட்சிப்பொறுப்பில் இருக்கும்போதும், எம்.எல்.ஏ. பொறுப்பில் இருக்கும்போதும் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. உடல் நலத்தில் குறைவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இத்தகைய பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது என்பதை மனதளவில் ஏற்று, அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தேன்.

அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அரசியலில் தொடர்ந்தனர். தமிழக மக்கள் அவர்களை நம்பி இருந்தனர். அதனால், அவர்களால் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆனால், நான் கட்சியின் அவைத் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் தான் இருந்தேன். அதனால் நான் விலகுவது ஒன்றும் இழப்பு கிடையாது.

தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் என் மீது மரியாதை வைத்திருந்தார். நான் நினைத்த நேரத்தில் அவரை சென்று பார்த்து பேசுவேன். ஆனால், அரசியல் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு உண்டு. அவரிடம் என்னுடைய கருத்தை சொல்வேன். கட்சி நிலைப்பாட்டில் தலையிட மாட்டேன். இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் விஜயகாந்த்தான் முடிவுகளை எடுத்து அறிவிப்பார்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு கட்சி தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியை தொடரவே தே.மு.தி.க.வில் சேர்ந்தேன். ஆனால், என்னுடைய அரசியல் அனுபவம் ஏற்கப்படவில்லை. தே.மு.தி.க. செயற்குழு கூடுவது குறித்து அவைத் தலைவரான எனக்கே தெரிவிக்கவில்லை. அதனால், நான் திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு காலதாமதமாக கலந்துகொண்டேன்.

15 நாட்களாகவே இந்த சிந்தனை எனக்கு இருந்தது. என்னுடைய நேரம், உழைப்பு, அறிவு, ஆற்றல் ஆகியவை வீணாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தேன். தமிழ்நாட்டின் எதிர்காலம் சோதனை நிறைந்தாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்திய அரசியலில் பெரிய மாற்றம் வரும். அதை புரிந்து செயல்படவும், சிந்திக்கவும் நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்தேன்.

சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக-தேமுதிக கூட்டணி அமைய நான்தான் முக்கிய பங்காற்றினேன். விஜயகாந்த்கூட வேண்டா வெறுப்பாகத்தான் ஒத்துக்கொண்டார். தே.மு.தி.க.வை காப்பாற்றி வளர்க்க இது ஒரு வாய்ப்பு என்று நான் கருதினேன். ஆனால், கூட்டணியை விட்டு விலகும் முடிவை அவர்கள்தான் எடுத்தார்கள். ஆட்சியை எதிர்த்தால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால், இவை எல்லாம் எனக்கு தெரியாது.

எதிர்கட்சியாக இருந்து செயல்படும்போது, கூட்டணியில் இருக்கும் ஆளுங்கட்சியை சரியாக புரிந்து செயல்பட வேண்டும். அவர்கள் கொண்டுவரும் திட்டங்களை வளர்க்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், அரசியலில் தடுமாற்றமான நிலையை எடுத்துவிட்டார்கள்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றுதான் நான் கூறினேன். ஆனால், கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். இனி நானே செயல்பட வேண்டும் என்பதல்ல. 4 பேரை செயல்பட வைத்தாலே போதும். நான் எடுத்த இந்த முடிவு துறவரம் அல்ல. இளைஞர்களுக்கு எதிர்கால அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும்.

இதில் வருத்தம் எதுவும் இல்லை. எனக்கு வேறு எதிலும் நாட்டமும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினை, மலேசியா, சிங்கப்பூரில் தமிழர்கள் தாக்கப்படுவது, காவிரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை தாக்குவது என்று தமிழர்களுக்கு பிரச்சினைகள் அதிகம் உள்ளன. தமிழக மக்களுக்கு எதிர்காலத்தில் நெருக்கடி நிலை இருக்கிறது. அதற்கு உதவி செய்ய என்னை தயார்படுத்திக்கொள்வேன்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு வரும் கோப்புகளை எனக்கு அனுப்ப அரசாணையே வெளியிட்டார். அந்த அளவுக்கு நான் பார்க்காத பதவிகளே இல்லை. எனக்கு பதவி ஆசை என்பது கிடையாது.

1950 ஆம் ஆண்டிலேயே அண்ணா எங்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்தார். அவர் சொல்வார், நாம் பேசும்போது நியாயமாக இருப்பதுடன், பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நமது கருத்து இருக்க வேண்டும் என்றும், எதிர்கட்சிக்காரர்கள் நமது கருத்தை எதிர்த்தாலும், மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என்று கூறுவார். சுதந்திரமாக நான் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

இது தற்காலிகமானதுதான். எனது அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கிறேன். டெல்லியில் பல மாற்றங்கள் வரும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ஆலந்தூர் மக்களுக்காக நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். 15 நாட்களில் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தனர். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அதில் நல்ல இளைஞரை தேர்ந்தெடுக்க வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Leave a Reply