கொத்தடிமைகள் 3 பேர் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் என்ற பகுதியில் தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. வடமாநிலத்தவர்களான சஞ்சய், பிரபாத்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பசந்த்குமார் மாலிக் (21), அமிரஞ்சன்தாஸ் (17), நபாமாலிக் (17) ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களைப் போல நூற்றுக்கணக்கானோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். நபர் ஒருவருக்கு மாதம் ரூ. 7 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் ஒரு சிறிய அறையில் 10-க்கும் மேற்பட்டோரோடு தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பளம் பணத்தையும் சாப்பாடுக்கு ரூ. 3 ஆயிரம், தங்கும் இடத்துக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் பிடித்தம் செய்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அமிரஞ்சன்தாஸ் ஒடிசாவில் உள்ள தனது பெற்றோர்களிடம் கூறி, தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அமிரஞ்சன்தாஸின் தந்தை அனிருதாதாஸ் திருமுடிவாக்கம் வந்து, தனது மகனை தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் அவரோடு அனுப்பவில்லையாம். இது குறித்து, அனிருதாதாஸ் ஒடிசாவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்னையில் உள்ள சர்வதேச நீதிக் குழுமத்தை விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து திருமுடிவாக்கம் சென்ற சர்வதேச நீதிக்குழுமத்தின் களப்பணிகள் இயக்குநர் ஆலீஸ் சுகன்யா, வழக்குரைஞர் ராஜ்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அங்கு கொத்தடிமையாக வேலை செய்து வந்த பசந்த்குமார் மாலிக், அமிரஞ்சன்தாஸ், நபாமாலிக் ஆகியோரை மீட்டனர்.

அவர்களுக்கு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் சந்திரன், தமிழக அரசின் நிவாரண நிதி வழங்கினார். பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் யாரும் இல்லாததால், நபாமாலிக் செங்கல்பட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Leave a Reply