இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கி பேசுகிறார். கூட்டத்தில், 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கவும், பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.