இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 280 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 244 ரன்களும் எடுத்தன. 36 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 421 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. அல்விரோ பீட்டர்சன் 76 ரன்களுடனும், பாப் டு பிளிஸ்சிஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி நாளில் 320 ரன்கள் தேவைப்பட்டன.
தேனீர் இடைவெளிக்கு பிறகு அணியின் ஸ்கோர் 402 ரன்களை எட்டிய போது, ஒரு வழியாக இந்த மெகா கூட்டணி உடைந்தது. டிவில்லியர்ஸ் (103 ரன், 168 பந்து, 12 பவுண்டரி), இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. பிளிஸ்சிஸ்-டிவில்லியர்ஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
டிவில்லியர்ஸ் ஆட்டம் இழந்த போது, தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 77 பந்துகளில் 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்து வந்த டுமினி 5 ரன்னுடன் வெளியேற பரபரப்பு பற்றிக் கொண்டது. முடிவு என்னவாக இருக்கும் என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது.
இந்த பரபரப்பான சூழலில் பிளிஸ்சிசுடன், வெரோன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இறுதி கட்டத்தில் இந்திய கேப்டன் டோனி வேகப்பந்து வீச்சாளர்களையே முழுமையாக பயன்படுத்தினார். அவர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிளிஸ்சிஸ் 134 ரன்களில்(309 பந்து, 15 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். ரஹானே அவரை சூப்பராக ரன்-அவுட் செய்தார். அவரது விக்கெட் திருப்பு முனையாக அமைந்தது. இந்திய வீரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிளிஸ்சிஸ்க்கு பிறகு ஸ்டெயின் ஆட வந்தார்.
கடைசி 3 ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் உச்சகட்ட டென்ஷன் நிலவியது. ஆனால் பிலாண்டர்-ஸ்டெயின் ஜோடி கடைசி நேரத்தில் விக்கெட்டை இழந்து தேவையில்லாத நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததால், ‘ரிஸ்க்’ எடுக்க முன்வரவில்லை. கடைசிக்கு முந்தைய 2 ஓவர்களை முகமது ஷமியும், ஜாகீர்கானும் மெய்டனாக்கினார்கள். இந்த ஓவர்களில் அவர்கள் பந்தை தொடவே இல்லை.
கடைசி ஓவரிலும் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். இதில் எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன்னும், கடைசி பந்தை ஸ்டெயின் சிக்சருக்கு தூக்கிய வகையில் 6 ரன்னும் மட்டும் ஷமி விட்டுக் கொடுத்து திரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பரபரப்பான ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 450 ரன்கள் குவித்தது. இதனால் இந்த டெஸ்ட் யாருக்கும்-வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத அணியான இந்தியா அந்த பெருமையை போராடி தக்க வைத்துக் கொண்டது. விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி டர்பனில் தொடங்குகிறது.