கடந்த ஜுன் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரிகர்களாக சென்ற தமிழகத்தை சேர்ந்த 14 பேர் அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் காணாமல் போனார்கள். அவர்களது குடும்பத்தினர்களுக்கு நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் நிதியுதவி அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்ற ஜூன் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான பக்தர்கள் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய தமிழக யாத்திரிகர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 657 யாத்திரிகர்கள் பத்திரமாக சென்னை அழைத்து வரப்பட்டு பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த யாத்திரிகர்களில் 14 பேர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. பின்னர் அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர்.
காணாமல் போன 14 பேர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3.5 லட்சமும், உத்தரகாண்ட் மாநில நிவாரண நிதியில் இருந்து ரூ.1.50 லட்சமும், பிரதமரின் பொது நிவாரண நிதி வழங்கிய ரூ.2 லட்சமும் ஆக மொத்தம் ரூ.7 லட்ச ரூபாயை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
காணாமல் போன 14 பேர்களின் குடும்பத்தினர் ஓவ்வொருவருக்கும் ரூ. 7 லட்சம் கிடைத்தது. நிதியை பெற்றுக்கொண்ட அந்த குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தங்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில் அமைச்சர் ராணா, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மற்றும் அரசு உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.