மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்லாந்து நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்த மேற்கிந்திய தீவுகள் தனது அதிரடி பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தது. நியூசிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் மெக்கல்லம் 51 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் பிராவோ மிக அபாரமாக பந்துவீசி 44 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் எளிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பவல் ஆட்டமிழந்தார். பின்னர் விளையாட வந்த வீரர்களும் பேட்டிங் செய்ய திணறினர். ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழந்து 96 ரன்களுக்கு தத்தளித்தது. பின்னர் சுதாரித்த சமி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 27.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மேற்கிந்திய திவுகள் அணியின் சமி ஆட்டநாயகனாகதேர்ந்தெடுக்கபட்டார்.
இரு அணிகளுக்கிடையேயான் இரண்டாவது கிரிக்கெட் போட்டி வரும் 29ஆம்தேதி நேப்பியர் நகரில் நடைபெறும்.