இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இவர் அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த லால்பகதூர் சாஸ்திரி பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி தனது வேலையை உதறி தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்துள்ளார். தமது தாத்தாவை போல நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தமது மனதில் நீண்டநாள் கனவாக இருந்ததாகவும், சரியான தலைமை இல்லாததால் இதுவரை அரசியலுக்கு வரவில்லை என்றும் இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் புரட்சியான எண்ணங்கள் தன்னை கவர்ந்ததால் கட்சியில் இணைந்துள்ளேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆதர்ஷ் சாஸ்திரியின் தந்தை அனில் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 2014 பாராளுமன்ற தேர்தலில் இவர் டெல்லியில் உள்ள முக்கிய தொகுதியில் போட்டியிடுவார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.