நேற்று மாலை ரஷ்யாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரயில் நிலையத்தில் இருந்த 16 பேர் உடல்சிதறி பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷ்யாவை சேர்ந்த Volgograd என்ற நகரில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு நேற்று மாலை வந்த தற்கொலைப்படை பெண் ஒருவர் ரயில் பயணிகள் இடையே நடந்து செல்லும்போது தனது உடம்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் தற்கொலைப்படை பெண் உள்பட 16 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், அதனால் அதிக சேதம் ஏற்பட்டதாகவும் ரயில்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களில் ரஷ்யாவை Volgograd நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரும் அவருடைய ஐந்து வயது மகளும் ஆவார்கள். வெடிவிபத்துக்கு காரணமான பெண், இஸ்லாம் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இந்த தாக்குதல் விரைவில் ரஷ்யாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை சீர்குலைப்பதற்காகவே நடத்தப்பட்டதாவும் ரஷ்ய காவல்துறை உயரதிகார் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 39 நாட்களுக்கு முன்னர் இதே போன்று பெண் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் ரஷ்யாவின் பேருந்து ஒன்றில் தாக்குதலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.