இலங்கை ராணுவ முகாமை படம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழக செய்தியாசிரியர் தமிழ் பிரபாகரன் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். அவர் விசா விதிமுறையை மீறியதால் நாடு கடத்தப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் தமிழர் பகுதிக்கு சுற்றுலா விசாவில் சென்ற தமிழ் பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன், அங்குள்ள ராணுவ முகாமை படம் பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நேற்று மாலை அவரை இந்திய குடிவரவு துறையிடம் ஒப்படைத்த இலங்கை அரசு, அவரை நாடு கடத்துவதாக அறிவித்தது.
நேற்று இரவு சென்னைக்கு விமானம் மூலம் வந்த தமிழ்பிரபாகரன், இலங்கை ராணுவத்தினர் தன்னை கைகளில் விலங்கு மாட்டி சித்திரவதை செய்தனர் என்றும், தான் அங்கு ராணுவ முகாம் எதையும் படம் பிடிக்கவில்லை என்றும் ஒரு தனியார் விழாவைத்தான் படம்பிடித்தேன் என்றும் கூறினார்.
ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ்பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்றும் அவர் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்றும், நேற்று இரவு பேட்டியளித்தனர். முன்னுக்கு பின் முரணான பேட்டியை இருவரும் அளித்துள்ளதால் பொதுமக்கள் உண்மையில் என்ன நடந்தது என்று குழம்பியுள்ளனர்.